Wednesday, January 12, 2011

சாலையில் சாகசமும் வீணாகும் உயிர்களும்...

காலை ஒன்பது மணி. இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனம் என்னை வேகமாக முந்தி சென்றது. அதில் சுமார் இருபது வயது மதிக்கத் தக்க இருவர் சென்றனர். சாலை நேராக இருந்தபோதிலும் அந்த பைக்கை ஒட்டியவன் வளைத்து வளைத்து பந்தாவாக(?) ஒட்டி சென்றான். முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு மாநகரப் பேருந்தை இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றான்.  சாலையின் ஓரத்தில் பேருந்துக்கு சற்று முன்னால் ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருக்கிறது. பேருந்து அந்த ஆட்டோவை நெருங்கும் முன் இவன் பேருந்தை முந்த வேண்டுமென்பது இவனது திட்டம். ஆனால் இவன் திட்டம் பலிக்கவில்லை. ஆட்டோ மீது இவனது பைக் லேசாக உரசியதைப் பார்த்தேன். அதற்குப்பின் அந்த பைக்கைக் காணவில்லை. அடுத்த வினாடி டம டம என்று சப்தம். பேருந்து கிரீச்சிட்டு சடன் பிரேக் போட்டு நின்று விட்டது. கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால் பேருந்தின் முன் சக்கரத்துக்கு அடியில் பைக் நசுங்கிக் கிடந்தது. அந்த இருவரையும் காணவில்லை. இதற்குள் கூட்டம் கூடி விட்டது. அனைவரும் பதைபதைக்கும் நெஞ்சத்தோடு பேருந்துக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு பேரும் காலி என்று நினைத்தேன். ஆனால் முகம் கை கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட உருண்டு எழுந்து நடந்து வந்தனர் இருவரும். யார் செய்த புண்ணியமோ உயிர் பிழைத்து விட்டனர். ஒருவேளை உயிர் போயிருந்தால்? பின்னால் அமர்ந்து வந்த பையனும் நண்பனுடன் போய் சேர்ந்திருப்பார் (நண்பேன்டா !!!).

இருவரும் பேருந்தின் அடியிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் இருவரின் முகத்திலும் மரண பயம் தெரிந்தது. பேயறைந்தாற்போல் வெளிறிப்போய் இருந்தது அவர்கள் முகம். உய்யலாலா பாடிக்கொண்டு சந்தோஷமாக இருந்த அவர்களின் நிலை நொடியில் மாறிப்போனது.

பேருந்தின் வலதுபுறம் முந்திச்செல்ல வழி இருந்தும் இவன் இடதுபுறம் சென்றது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இடதுபுறம் சென்றால் தான் பேருந்தில் உள்ள பெண்களைக் கவர முடியும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இப்படி பந்தாவாக பைக் ஓட்டிச்செல்வதை உண்மையிலேயே இளம் பெண்கள் ரசிக்கிறார்களா அல்லது "லூசுப்பய" என்று நினைக்கிறார்களா என்பது தான். எப்படி நினைத்தாலும் நஷ்டம் என்னவோ பைக் ஒட்டுபவருக்குத்தான். 

எத்தனை உயிர்ப்பலி நடந்தாலும் இது போன்ற நபர்கள் சட்டை செய்யப்போவதில்லை. தனக்கென வரும்போதுதான் தெரியும். அப்போது உயிர் இருந்தால் திருந்த வாய்ப்பு உள்ளது.

1 comment:

  1. வலதுபுறத்தில் முன்னேறாமல் இடதுபுறத்தில் முன்னேற பெண்கள் மட்டும் காரணமல்ல;வேறு பல காரணங்களும் உண்டு.

    உதாரணமாக எந்த மாநகரப் பேருந்தும் சாலையோரமாக நிற்பதில்லை;இதனால் அந்த பேருந்தை முந்தும்போது பின்னால் வரக்கூடிய மற்ற வாகனங்களில் சிக்குவோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படும்;மேலும் வலதுபக்கத்தில் முந்துவதற்கு சில நொடிகள் முன்பு திடீரென பேருந்து நகரும்;இப்படி பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இடதுபுறத்தில் முந்துவதை விட வலது புறத்தில் முந்தும்போது ஏற்படுகிறது;ஆனாலும் சாலைவிதியின்படி இடதுபுறம் முந்துவது தவறுதான்;அதை மீறினால் அவரவர் விதிப்படி நடக்கும்..!

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்