Wednesday, November 10, 2010

ஏடுகொண்டலவாடா

எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து திருப்பதிக்கு அழைத்துச் செல்லுமாறு என் மனைவி என்னிடம் கூறிக்கொண்டே இருந்தாள். கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாத நான் ஐந்து வருடங்களாக தட்டிக்கழித்து விட்டேன். இந்த வருடம் கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற என் மனைவியின் வார்த்தையை தட்டமுடியவில்லை. கடைசியில் வேறு வழியின்றி அரைமனதுடன் சம்மதித்தேன்.

தீபாவளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்ததால், வெள்ளிக்கிழமை தீபாவளியை முடித்துவிட்டு சனிக்கிழமை காலையில் என் மாமனார், மாமியார், நான், என் மனைவி மற்றும் என் மகன் அனைவரும் கிளம்பினோம். சமீபத்தில் திருப்பதி சென்று வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டதில் முன்னூறு ரூபாய் (ஒரு நபருக்கு) கவுண்டர் வழியாக சென்று தரிசிப்பது என்று முடிவானது.

கோயம்பேட்டிற்கு சென்று திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். செல்லும் வழியில் மதிய உணவிற்காக ஒரு ஓட்டலில் பேருந்து நின்றது. முதலில் டோக்கன் வாங்கிவிட்டுதான் சாப்பாடு வாங்க வேண்டும். டோக்கன் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் சப்ளை செய்வதற்கு யாரையும் காணவில்லை. சிறிது நேர காத்திருத்தலுக்குப் பின் ஒருவர் வந்து டோக்கனை வாங்கிக்கொண்டு சாப்பாடு கொடுத்தார். சாப்பிட ஆரம்பித்த சில நிமிடங்களில் "பஸ் கிளம்பிருச்சு வாங்க" என்று கத்திக்கொண்டே என் மாமனார் ஓடி வந்தார். பாதி கூட சாப்பிடாத நிலையில் அவசர அவசரமாக கையை கழுவிவிட்டு ஓடிப்போய் பேருந்தில் ஏறிவிட்டோம். பேருந்து நகர்ந்து கிட்டத்தட்ட வெளியே வரும்போது பின்னால் ஒரு தம்பதியினர் கத்திக்கொண்டே ஓடி வருவதை பார்த்த டிரைவர் வண்டியை நிறுத்தி அவர்களை ஏற்றிக்கொண்டார். இன்னும் எத்தனை பேர் உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை. யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு டிக்கெட் தொகை வசூல் ஆகிவிட்டதல்லவா?

மூன்று மணி நேர பயணத்துக்குப்பின் ஒரு பேருந்து நிலையத்துக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. வெளியே "Edukondalavada Bus Stand" என்று எழுதியிருந்தது. இன்னும் திருப்பதி வரவில்லையா என்று நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். பேருந்தில் இருந்த அனைவருமே இறங்க தயாரான போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. அருகில் இருந்த ஒரு நபரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது அது திருப்பதி என்று. உடனே நாங்களும் கீழே இறங்கிவிட்டோம். அப்புறம் மலை மேலே செல்வதற்கு ஒரு பஸ்ஸில் ஏறி சென்றோம்.

அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்துவிட்டோம். கோவிலை நோக்கி நடக்கத்தொடங்கினோம். சிறிது தூரம் சென்றவுடன் 300 ரூபாய் வரிசை என்று ஒரு இடத்தில் போர்டு மாட்டி இருந்தது. சரி என்று அந்த கூண்டுக்குள் சென்று நடக்க ஆரம்பித்தோம். திடீரென்று அந்த கூண்டு முடிந்துவிட்டது. மீண்டும் சாலையில் நடந்தோம். சிறிது தூரம் சென்றதும் மறுபடியும் அதே போல கூண்டு. மறுபடியும் கூண்டுக்குள் நுழைந்தோம். இந்தக்கூண்டும் பாதியில் முடிந்து விட்டது.

இது வேலைக்கு ஆகாது என்று நினைத்துவிட்டு பொருட்கள் பாதுகாக்கும் இடம் எங்கே இருக்கிறது என்று விசாரித்து அங்கே நாங்கள் கொண்டு சென்ற பைகள், செல்பேசிகளை கொடுத்துவிட்டு 300 ரூபாய் வரிசை எங்கே ஆரம்பிக்கிறது என்று விசாரித்து சென்று வரிசையில் நின்றோம். என் நண்பன் ஒருவன் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் பார்த்துவிடலாம் என்று சொல்லி இருந்ததால் தைரியமாக நின்றேன். ஆனால் அன்று எனக்கு கெட்ட நேரம். ஐந்து மணி நேரம் வரிசையில் நின்றோம். அந்த ஐந்து மணி நேரமும் போராட்டம், அவஸ்தை, தள்ளுமுள்ளு, வாக்குவாதம், சண்டை சச்சரவு, நெரிசல். வரிசையில் பாதி தூரம் சென்றபிறகுதான் டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் வாங்கியதும் "இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லாமல் தரிசனம் பார்த்துவிடலாம்" என்று நினைத்தேன். ஆனால் அதற்கு பிறகுதான் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது. வரிசையில் வந்துகொண்டிருந்த எங்களை ஒரு பெரிய ஹாலில் உட்காரவைத்துவிட்டார்கள். உள்ளே சுமார் 500 பேர் இருக்கலாம். அந்த ஹாலில் இருந்து அடுத்த வரிசையில் ஐக்கியம் ஆவதற்கு ஒரு சிறிய கதவு மட்டுமே. அந்த கதவின் அருகில் ஆரம்பித்து ஹால் முழுவதும் அந்த கதவு திறப்பதை எதிர்பார்த்து கொலை வெறியுடன் மக்கள் கூட்டம். கதவை திறந்த அடுத்த வினாடி கூடி இருந்த அத்தனை பெரும் முண்டியடித்துக்கொண்டு நெருக்கித் தள்ள, குழந்தைகளை அழைத்து வந்தவர்கள் (நான் உட்பட) பரிதாபமாக மாட்டிக்கொண்டு திண்டாட, குழந்தைகள் கதற, ஒரு வழியாக பிதுக்கிக்கொண்டு கதவைத்தாண்டி வரிசையில் ஐக்கியமானோம்.

ஆமை போல நகர்ந்து கொண்டிருந்த வரிசை திடீரென கலைந்து கோவிந்தா கோவிந்தா என்று கத்திக்கொண்டே திபுதிபுவென ஓட ஆரம்பித்தது. கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்களாம்.... அப்பாடா இனிமேலாவது நிம்மதியாக செல்லலாம் என்று எண்ணிய வேளையில், பின்னால் இருந்து வந்த கூட்டம் நெருக்கி தள்ள, மறுபடியும் வரிசையில் ஐக்கியம் ஆவதற்குள் ஒரு வழி ஆகி விட்டோம். சந்நிதியை நெருங்கும்போது பக்கவாட்டில் நிற்கும் கோவில் ஊழியர்கள் ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருத்தரையும் பிடித்து தள்ளி விட்டுக்கொண்டிருந்தார்கள் (வேகமாக சென்றுகொண்டிருந்தால் கூட). சந்நிதிக்குள் அப்படி என்னதான் உள்ளது என்று பார்க்கும்முன் வெளியே தள்ளி விட்டுவிட்டார்கள் ஊழியர்கள். இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்று நொந்து போய் வெளியே வந்துவிட்டோம்.

லட்டு கவுண்டர் வெளியில் உள்ளது என்று சொல்லப்பட்டது. லட்டு வாங்கும் ஆவலில் வேகமாக சென்ற நான் அங்கே நின்ற வரிசையை பார்த்ததும் "லட்டே வேணாம்" என்று முடிவு பண்ணிவிட்டு கிளம்பிவிட்டேன். திருப்பதிக்கு சென்றுவிட்டு லட்டு வாங்காமல் வந்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்பும்போது இரவு பதினொன்று மணி. மலையிலிருந்து கீழே செல்வதற்காக பேருந்து நிலையத்துக்கு சென்றோம். அரை மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வரவே இல்லை. எங்களைப்போலவே இன்னும் நிறைய பேர் பேருந்துக்காக அங்குமிங்கும் தவித்துக்கொண்டிருந்தனர். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒரு ஜீப் எங்கள் அருகே வந்தது. அதன் ஓட்டுனர் "திருப்பதி திருப்பதி" என்று கூவினார். ஒரு நபருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் கீழே கொண்டு போய் விடுவதாக சொன்னார். பரவாயில்லை என்று ஏறி அமர்ந்தோம். கீழே வந்து ஒரு மணி நேர காத்திருத்தலுக்கு பின் சென்னை செல்லும் பேருந்து ஒன்று வந்தது. அடித்து பிடித்து ஏறி சீட்டை பிடித்து சென்னை வந்து சேரும்போது அதிகாலை ஐந்து மணி.

ஏடுகொண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா....!!!

இனிமேல் நான் பணக்காரன் ஆகிவிடுவேன்... :-)


Thursday, November 4, 2010

Welcome

Thanks for visiting my page.

I have created this blog to share my knowledge, personal experiences and useful information.

Thank you once again,
Cheers
M.P. Vijayakumar

பிரபல (?) பதிவுகள்