Tuesday, January 25, 2011

டெல்லி போனதும் மறக்காம துப்பாக்கிய வாங்கிக்கோ...

தயவு செய்து சீரியசாக படிக்கவும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு எங்கள் ஊரில் உள்ள வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி  விற்பனை செய்யும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய அளவுக்கதிகமான சுறுசுறுப்பைப் பார்த்து அவர்களுடைய டெல்லி கிளைக்கு என்னை அனுப்ப முடிவெடுத்தார்கள்.

டெல்லி கிளம்புவதற்கு முந்தைய நாள் எங்கள் ஓனர் என்னைக் கூப்பிட்டு "டெல்லி போனதும் ஒரு நாலஞ்சு புது டிரெஸ் எடுத்துக்கோ. அங்க முழுக்கைச் சட்டைதான் போடணும். சட்டைய இன் பண்ணிதான் போட்டுட்டு போகணும். ரெண்டு ஷூ வாங்கிக்கோ. ஷூ போடாம போனா நல்லா இருக்காது." என் காலைப் பார்த்துவிட்டு  "இந்த மாதிரி சிலிப்பர்லாம் வீட்ல இருக்கும்போது போட்டுக்கோ. வெளில எங்கயும் போட்டுட்டு போய்டாத. தயவு செஞ்சு அங்க போன பிறகாவது கர்சீப் யூஸ் பண்ணு. முக்கியமா முன்ன பின்ன தெரியாதவங்க யார்கிட்டயும் பழகாத." என்று அடுத்தடுத்து சொல்லிக்கொண்டிருந்தவர் "இத சொல்ல மறந்துட்டேன் பாத்தியா. டெல்லில திருடர்கள் தீவிரவாதிகள் நிறைய இருப்பாங்க. நீயும் காமேஸ்வரனும் கலெக்ஷனுக்கு போயிட்டு வரும்போது ரூபாய் பத்திரமா கொண்டு வரணும்ல. அதனால அங்க போனதும் முதல்ல துப்பாக்கி லைசன்ஸ் வாங்கிடு.... சரி சரி அதெல்லாம் காமேஸ்வரன் பாத்துக்குவான். அனாவசியமா துப்பாக்கிய வெளிய எடுக்காத. நீ நல்ல உயரமா இருக்குறதுனால தான் உன்னை அனுப்புறோம். எப்பவும் அலர்ட்டா இருக்கணும். யாராவது உங்கள நோட் பண்ணினாலோ பாலோ பண்ணினாலோ காமேஸ்வரனுக்கு சிக்னல் குடு. அவன் சொன்னா மட்டும்தான் சுடனும். புரியுதா?" என்றார். நானும் புரிந்தது என்று திகிலுடன்  தலை ஆட்டினேன்.

மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள். நமக்கு எந்த மாதிரி துப்பாக்கி தருவாங்க? நம்ம ஊர் போலிஸ் வச்சிருக்குற மாதிரி நீளமா இருக்குமா அல்லது ரிவால்வர் மாதிரி சின்னதா இருக்குமா? சில திரைப்படங்களில் துப்பாக்கி சுடும்போது சொல்லும் யுக்திகளை நினைவுபடுத்திப் பார்த்தேன். சுடும்போது கை நடுங்கக்கூடாது. அப்போதுதான் குறி தவறாது போன்றவைகளை மனதுக்குள் இருத்திக்கொண்டேன். பல படங்களில் பார்த்த  துப்பாக்கிச் சண்டைகள் மனதுக்குள் வந்து வந்து போயின. ஒரு நிஜ ஹீரோ போல உணர்ந்தேன். படபடக்கும் மனதுடனும் கட்டுக்கடங்கா ஆர்வத்துடனும் டெல்லி பயணமானேன்.

டெல்லி சென்று இறங்கியதிலிருந்து ஒரே காய்ச்சல். அதனால் ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்கள். அந்த நேரத்தில் எனக்குத் தேவையான ஆடைகள் பூட்சுகள் எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டேன். நாட்கள் நகர ஆரம்பித்தது. ஒரு வாரம் ஆன பிறகும் கூட துப்பாக்கியைப் பற்றி மட்டும் யாருமே பேசவில்லை. எனக்கோ தலை வெடித்துவிடும் போல் இருந்ததால் காமேஸ்வரனிடம் நானே கேட்டேன்.

"எனக்கு துப்பாக்கி எப்போ தருவிங்க?"

"என்னது????? துப்பாக்கியா? என்னப்பா சொல்ற நீ?"

"இல்ல... ரவி அண்ணன்தான் சொன்னாரு. டெல்லி போனதும் துப்பாக்கி தருவாங்க. காமேஸ்வரன் லைசன்ஸ் வாங்கி தருவார்னு...."

நான் சொல்லி முடிக்கும்முன் அங்கு இருந்த சக ஊழியர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போதுதான் புரிந்தது எல்லாமே சும்மா என்று. என் ஹீரோ கனவு கலைந்து போனது. :-(

3 comments:

  1. க​தை நன்றாக இருக்கிறது. இன்னும் ​கொஞ்சம் சஸ்​பென்​சையும் உங்கள் கனவுப் பகுதி​யையும் வளர்த்திருக்கலாம்.
    நி​றைய படியுங்கள்,
    முயற்சி ​செய்யுங்கள் உங்களிடமிருந்து நல்ல சு​வையான க​தைகள் வரும் என்ற நம்பிக்​கையிருக்கிறது.

    ReplyDelete
  2. க​தை நன்றாக இருக்கிறது.

    பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

    http://sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  3. இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்