Tuesday, March 8, 2011

ஏர்டெல் கிரிக்கெட் அலர்ட் நிறுத்துவது எப்படி?

நான் ஏர்டெல் பிரிபெய்ட் உபயோகிக்கிறேன்.  உலகக்கோப்பை ஆரம்பித்த நாளில் இருந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கிரிக்கெட் ஸ்கோர் எஸ்.எம்.எஸ் மூலம் வந்து கொண்டே இருந்தது. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் என்னுடைய அக்கவுண்டிலிருந்து குறைந்து கொண்டிருந்தது. இது எல்லாமே என்னுடைய அனுமதியில்லாமல்.

இம்சை தாங்க முடியாமல் கஸ்டமர் கேர்க்கு கால் செய்து இரண்டு முறை புகார் செய்தும் பலனில்லை. இம்சை தொடர்ந்து கொண்டே இருந்தது. தினமும் இந்த வெட்டி எஸ்.எம்.எஸ் அனைத்தையும் அழித்துக்கொண்டிருப்பதே பெரிய வேலையாக இருந்தது. உலகில் உள்ள அனைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளும் நினைவில் வந்து போனது. மறுபடியும் கஸ்டமர் கேர்க்கு கால் செய்து புகார் செய்யலாம் என்றால் "எங்கள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் நேரடியாகப் பேச எண் ஒன்பதை அழுத்தவும்" என்ற ஆப்ஷன் மட்டும் வரவே இல்லை. ஒரு வாரப் போராட்டம் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது.

திடீரென்று நேற்று ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் எந்த ஒரு சேவையையும் தொடங்க அல்லது நிறுத்த *121# என்ற எண்ணை டயல் செய்யவும் என்று வந்தது. இதில் முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று டயல் செய்தேன். ஒருவழியாக பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனப்படாத அந்த கிரிக்கெட் அலர்ட்டை நிறுத்தி விட்டேன்.

Friday, February 11, 2011

இன்னும் எத்தன நாளைக்குப்பா ஸ்கூல்ல கொண்டு போய் விடுவிங்க?

"அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா..." வகுப்பில் சொல்லிக்கொடுத்ததை சந்தோஷமாக அவன்  அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் ப்ரிகேஜி மாணவனாகிய அகிலன்.

"என்னடா பாட்டு. என்கிட்டே சொல்லமாட்டியா?" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார் அகிலனின் அப்பா.

"அப்பா இன்னைக்கு எங்களுக்கு டிவில ரைம்ஸ் போட்டு காமிச்சாங்கப்பா!!!"

"ஓ அப்படியா! என்னென்ன ரைம்ஸ்லாம் போட்டாங்க??"

"ம்ம்ம்ம். கரடிக்குட்டி, ராமு ராமு, வா வா கருப்பாடே... எல்லாம் போட்டாங்கப்பா"
"அப்பா அப்பா அந்த சிடி வாங்கி தாங்கப்பா. நம்ம வீட்லயும் போடலாம்.."

அந்த சிடிய குடுங்க ஒரு காப்பி பண்ணிட்டு தர்றோம்னு கேட்டப்போ அவங்க பள்ளியில (அது ஒரு சின்ன வீடு மாதிரிதான் இருக்கும்) தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் அந்த சிடிய காட்டவாவது செய்யுங்கன்னு கெஞ்சி கேட்டு அதே சிடிய ஒருவழியா தேடிக் கண்டுபுடிச்சு வாங்கிக்கொடுத்தாச்சு.

அதுக்கப்புறம் தினமும் அவனுக்கு கொண்டாட்டம்தான். சிடிய கம்ப்யூட்டர்ல போட்டு விட்டுட்டு ரைம்ஸ் பாடுறதும் ஆடுறதும் அவனுக்கு ரொம்ப புடிச்ச விஷயம். அப்பப்போ கேம்ஸும் விளையாடுவான். பக்கத்து வீட்டு வாண்டு நண்பர்களை/நண்பிகளை கூட்டிட்டு வந்து பந்தா காட்டுவான். வாண்டுகள் யாரும் மாட்டலேனா பக்கத்து வீட்டு பெரிய ஆளுங்க யாரையாவது வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்து பக்கத்துல உக்கார வச்சு கம்ப்யூட்டர்ல பந்தா காட்டுவான்.

இப்படி ஆனந்தமா போய்க்கிட்டிருந்த அகிலனின் பள்ளி வாழ்க்கை எல்கேஜி போனதிலிருந்து ஆட்டம் கண்டு விட்டது. காரணம் அவனோட எல்கேஜி மிஸ்.

"ஹாய் அகிலன் டார்லிங்! குட் மார்னிங்" என்று முதல் நாள் கொஞ்சிப்பேசிய அந்த ஆங்கிலோ இந்திய மிஸ் நாட்கள் செல்லச் செல்ல சொர்ணாக்காவாக மாறிப்போனார். அகிலனைப் பற்றி கம்ப்ளைன்ட் சொல்லாத நாட்கள் மிகக் குறைவு. எழுதச் சொன்னா எழுத மாட்டேங்கிறான், ரைம்ஸ் சொல்ல மாட்டேங்கிறான், கோ-ஆபரேட் பண்ண மாட்டேங்கிறான் என்று தினம் ஒரு கம்ப்ளைன்ட்.

"அகில் குட்டி..... நீ குட் பாய்தான. ஏன்டா மிஸ் சொல்றத செய்ய மாட்டேங்கிற?" அப்பா கேட்டார்.

"மிஸ்ஸுதாம்பா என்னைய சும்மா சும்மா திட்டிட்டே இருக்காங்க"

"அவங்க எழுத சொன்னத நீ ஏன் எழுதாம இருந்த?"

"நான் எழுதினேனே.. அவங்கதான் நான் எழுதுனத புல்லா அழிச்சுவுட்டுட்டாங்க."

"நீ அழகா எழுதியிருக்கலாம்ல"

"எனக்கு எழுதத் தெரியலன்னு எத்தன தடவ சொல்றது உங்களுக்கு" அவன் குரலில் இயலாமை கலந்த கோபமும் அழுகையும்.

எப்பொழுதும் அப்பாவுக்கு முன்னாள் சென்று பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ளும் அகிலன் இன்று காலை எழுந்ததிலிருந்தே சண்டித்தனம் செய்து கொண்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அழுதான்.

"சீக்கிரம் வந்து வண்டியில ஏறு. லேட் ஆகுது...." அப்பா கத்தியும் வேண்டுமென்றே மெதுவாக நடந்து வந்தான். அவனுக்கு பள்ளி செல்ல விருப்பம் இல்லை என்பது அவன் நடவடிக்கையில் தெரிந்தது.

வண்டியில் செல்லும்போது, "மிஸ் சொல்றத நல்ல பிள்ளையா செய்யணும். அகிலன் பேட் பாய்னு பேர் வாங்கக் கூடாது. சரியா?" என்று சொல்லிக்கொண்டே வந்த அவன் அப்பாவிற்கு அவனின் மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது. பள்ளிக்கருகில் சென்றதும் திடீரென்று கேட்டான் "இன்னும் எத்தன நாளைக்குப்பா என்ன ஸ்கூல்ல கொண்டு போய் விடுவிங்க?" சற்றே நிலைகுலைய வைத்த கேள்வி. சமாளித்துக்கொண்டு "நல்லா படிச்சாதான் வேலைக்குப் போயி காசு சம்பாதிச்சு கார் வாங்க முடியும்" அப்படி இப்படின்னு சொன்ன பதில்கள் எதுவுமே அவனை பாதிக்கவில்லை.

பைக்கை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோக்கி நடந்தனர் இருவரும். வகுப்பு வாசலில் மிஸ் நிற்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. வகுப்பை நெருங்க நெருங்க அகிலனின் வேகம் குறைந்தது. பின்னால் கையைக் கட்டிக்கொண்டு முகம் முழுவதும் கோபக்கனலுடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மிஸ்ஸைப் பார்த்ததும் மிரண்டு போய் அப்பாவின் கையை விடுவித்துக்கொண்டு திரும்பி ஓடத் தயாரானான் அகிலன். அவன் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு போய் மிஸ் கையில் ஒப்படைத்தார் அவன் அப்பா. ஆங்கிலத்தில் கன்னாபின்னாவென்று ஏதோ கத்திக்கொண்டே அவனை உள்ளே தள்ளி கதவைப் பூட்டினார் அந்த மிஸ்.

"அந்த மிஸ் ராட்சஸிங்க... எச் எம் கிட்ட சொல்லி உங்க பையன வேற செக்க்ஷனுக்கு மாத்திடுங்க"

"கோகுல் மம்மியும் ஷெரின் மம்மியும் மிஸ் பிறந்தநாளைக்கு சுடிதார் எடுத்துக் கொடுத்தாங்க. நீங்களும்  அது மாதிரி அப்பப்போ கிப்ட் ஏதாவது கொடுக்கணும். அப்போதான் உங்க பையன நல்லா வச்சுப்பாங்க"

இதெல்லாம் அகிலன் அப்பாவுக்கு கிடைத்த அறிவுரைகள். வேற செக்க்ஷனுக்கு மாற்றினால் அங்கும் இதே நிலைமை என்றால் என்ன செய்வது? எச் எம்மும் அந்த மிஸ்ஸும் வேண்டியவர்களாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என்று பலவாறு யோசித்த அகிலனின் அப்பா நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார்.

இப்போது அகிலன் யூகேஜி படிக்கிறான். இங்கும் ஆங்கிலோ இந்தியன் மிஸ் தான். ஆனால் தங்கமான மிஸ். சந்தோஷமாக பள்ளிக்கு சென்றாலும் எல்கேஜியின் பாதிப்பிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. மீள்வான் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

டிஸ்கி: அகிலனின் அப்பா வேற யாரும் இல்ல நான்தான். இது ஒரு உண்மை சம்பவம்.

Monday, January 31, 2011

ஒழுக்கம் கெட்ட இந்தியனே எங்கள் பொருளை வாங்கிக்கொள்

சமீபத்தில் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம்.

விமானத்தினுள் இருந்த பயணிகள் லேசாக குலுங்கி பின் சமநிலைக்கு வருவதிலிருந்து விமானம் தரை இறங்கிவிட்டது என்பது புரிகிறது.

புது தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. விமானம் நிற்கும்வரை சீட் பெல்ட்டை அணிந்தே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்பு முடியும்முன் அனைவரும் சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு எழுந்திருக்கின்றனர்.

தங்கள் உடைமைகளை மேலிருந்து இறக்கும்பொழுது கவனமாக இறக்கவும்.

ஒருவர் மேலிருந்து தன்னுடைய உடைமைகளை எடுக்கும்போது அவர் பெட்டி சீட்டில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் மேல் பொத்தென்று விழுகிறது.

தயவு செய்து செல்போன் உபயோகிக்காதீர்கள்.

ஏதேதோ ரிங்டன் சப்தங்களும் போனில் பேசிக்கொள்ளும் சப்தங்களும் கேட்கின்றது.

அனைவரும் அவரவர் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விமானம் நிற்பதற்குள் அனைவரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுவதற்குத் தயாராக கதவின் அருகில் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

காட்சி முடிந்தது.

பின்னணியில் ஒரு குரல்: நம்முடைய இந்த அவசரமான வாழ்க்கையில் நமக்குத் தேவை அதிவேக இன்டர்நெட் கனெக்க்ஷன். அதனால் வாங்குவீர் __________ DATA CARD.

இந்த விளம்பரத்தில் அதிவேக இன்டர்நெட் தேவைக்கும் காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க இந்தியர்களைப் பற்றி கேவலமாகக் காட்டிவிட்டு எங்க இன்டர்நெட் கனெக்க்ஷன வாங்கிக்கோங்க அப்படின்னு சொல்றான்.  நமக்குத்தான் நம்மள நாமளே தாழ்த்திக்கொள்வது ரொம்பப் பிடிக்குமே. அதனால அதப் பார்த்து ரசிச்சுட்டு போயிட்டே இருப்போம்.

Tuesday, January 25, 2011

டெல்லி போனதும் மறக்காம துப்பாக்கிய வாங்கிக்கோ...

தயவு செய்து சீரியசாக படிக்கவும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு எங்கள் ஊரில் உள்ள வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி  விற்பனை செய்யும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னுடைய அளவுக்கதிகமான சுறுசுறுப்பைப் பார்த்து அவர்களுடைய டெல்லி கிளைக்கு என்னை அனுப்ப முடிவெடுத்தார்கள்.

டெல்லி கிளம்புவதற்கு முந்தைய நாள் எங்கள் ஓனர் என்னைக் கூப்பிட்டு "டெல்லி போனதும் ஒரு நாலஞ்சு புது டிரெஸ் எடுத்துக்கோ. அங்க முழுக்கைச் சட்டைதான் போடணும். சட்டைய இன் பண்ணிதான் போட்டுட்டு போகணும். ரெண்டு ஷூ வாங்கிக்கோ. ஷூ போடாம போனா நல்லா இருக்காது." என் காலைப் பார்த்துவிட்டு  "இந்த மாதிரி சிலிப்பர்லாம் வீட்ல இருக்கும்போது போட்டுக்கோ. வெளில எங்கயும் போட்டுட்டு போய்டாத. தயவு செஞ்சு அங்க போன பிறகாவது கர்சீப் யூஸ் பண்ணு. முக்கியமா முன்ன பின்ன தெரியாதவங்க யார்கிட்டயும் பழகாத." என்று அடுத்தடுத்து சொல்லிக்கொண்டிருந்தவர் "இத சொல்ல மறந்துட்டேன் பாத்தியா. டெல்லில திருடர்கள் தீவிரவாதிகள் நிறைய இருப்பாங்க. நீயும் காமேஸ்வரனும் கலெக்ஷனுக்கு போயிட்டு வரும்போது ரூபாய் பத்திரமா கொண்டு வரணும்ல. அதனால அங்க போனதும் முதல்ல துப்பாக்கி லைசன்ஸ் வாங்கிடு.... சரி சரி அதெல்லாம் காமேஸ்வரன் பாத்துக்குவான். அனாவசியமா துப்பாக்கிய வெளிய எடுக்காத. நீ நல்ல உயரமா இருக்குறதுனால தான் உன்னை அனுப்புறோம். எப்பவும் அலர்ட்டா இருக்கணும். யாராவது உங்கள நோட் பண்ணினாலோ பாலோ பண்ணினாலோ காமேஸ்வரனுக்கு சிக்னல் குடு. அவன் சொன்னா மட்டும்தான் சுடனும். புரியுதா?" என்றார். நானும் புரிந்தது என்று திகிலுடன்  தலை ஆட்டினேன்.

மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள். நமக்கு எந்த மாதிரி துப்பாக்கி தருவாங்க? நம்ம ஊர் போலிஸ் வச்சிருக்குற மாதிரி நீளமா இருக்குமா அல்லது ரிவால்வர் மாதிரி சின்னதா இருக்குமா? சில திரைப்படங்களில் துப்பாக்கி சுடும்போது சொல்லும் யுக்திகளை நினைவுபடுத்திப் பார்த்தேன். சுடும்போது கை நடுங்கக்கூடாது. அப்போதுதான் குறி தவறாது போன்றவைகளை மனதுக்குள் இருத்திக்கொண்டேன். பல படங்களில் பார்த்த  துப்பாக்கிச் சண்டைகள் மனதுக்குள் வந்து வந்து போயின. ஒரு நிஜ ஹீரோ போல உணர்ந்தேன். படபடக்கும் மனதுடனும் கட்டுக்கடங்கா ஆர்வத்துடனும் டெல்லி பயணமானேன்.

டெல்லி சென்று இறங்கியதிலிருந்து ஒரே காய்ச்சல். அதனால் ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்கள். அந்த நேரத்தில் எனக்குத் தேவையான ஆடைகள் பூட்சுகள் எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டேன். நாட்கள் நகர ஆரம்பித்தது. ஒரு வாரம் ஆன பிறகும் கூட துப்பாக்கியைப் பற்றி மட்டும் யாருமே பேசவில்லை. எனக்கோ தலை வெடித்துவிடும் போல் இருந்ததால் காமேஸ்வரனிடம் நானே கேட்டேன்.

"எனக்கு துப்பாக்கி எப்போ தருவிங்க?"

"என்னது????? துப்பாக்கியா? என்னப்பா சொல்ற நீ?"

"இல்ல... ரவி அண்ணன்தான் சொன்னாரு. டெல்லி போனதும் துப்பாக்கி தருவாங்க. காமேஸ்வரன் லைசன்ஸ் வாங்கி தருவார்னு...."

நான் சொல்லி முடிக்கும்முன் அங்கு இருந்த சக ஊழியர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்போதுதான் புரிந்தது எல்லாமே சும்மா என்று. என் ஹீரோ கனவு கலைந்து போனது. :-(

Thursday, January 20, 2011

யார் நன்மைக்காக இந்த மதமாற்றம்?

"டேய் விச... உங்க அம்மா நம்மளையெல்லாம் விட்டுட்டு போய்ட்டாடா...."

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான் என் பாட்டியின் (அம்மாவோட அம்மா) அலறல் சத்தம் கேட்டு ஒருவித பயத்துடன் வீட்டுக்குள் சென்றேன். உள்ளே படுத்திருந்த என் அம்மாவை சுற்றி ஒன்றிரண்டு பேர் அழுது கொண்டிருந்தனர். எனக்கு அப்போது ஏழு வயது. விளையாட்டைத் தவிர வேறெதுவும் அறியாதவன். நடப்பது ஒன்றும் புரியாமல் வெளியே வந்து கோட்டைச்சுவர் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். வீட்டுக்குள் ஜனங்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல அழுகைச் சத்தம் அதிகமாகிக்கொண்டே போனது. காரணமே தெரியாமல் நானும் அழுது கொண்டிருந்தேன்.

அம்மா எங்கே சென்றாலும் அவங்க சேலையைப் பிடித்துக்கொண்டே நானும் செல்வேன். இருந்தாலும்  என் அம்மாவின் பிரிவு எவ்வளவு பெரிய இழப்பு என்று எனக்கு அந்த வயதில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் என் பாட்டிக்கோ அது ஒரு தாங்க முடியாத சோகம். என்னை பார்க்கும்போதெல்லாம் என் பாட்டி அழுதுவிடுவார்கள். நான் பெரியவனான பிறகும் இது தொடர்ந்தது. பத்தாவது படிக்கும் வரை நான் என் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன்.

அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நேரத்தில் பால்க்காரம்மா என்று அழைக்கப்படும் என் பாட்டியின் தோழி ஒருவர் என் பாட்டியை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தார். இந்துச்சாமியைக் கும்பிட்டதாலதான் எங்க பாட்டிக்கு இப்படி ஒரு நிலைமை என்றும்  கர்த்தரை   நம்பியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றும் தொடர்ந்து சொல்லி வந்தார். இயல்பாகவே இளகிய மனதுடைய என் பாட்டியும் இனிமேலும் இதுமாதிரி துன்பம் வந்துவிடக்கூடாது என்று எண்ணி வேதத்தில் இனைந்து விட்டார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னையும் சேரச்சொல்லி நச்சரித்துக்கொண்டே இருப்பார்.

சில வருடங்களுக்குப் பின் அந்த பால்க்காரம்மாவின் திருமணமாகாத ஒரே மகன் நூறாண்டுகளுக்கு ஒருமுறை எங்கள் ஊர் ஆற்றில் வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துவிட்டார். 

இவ்வளவு நாளும் என் பாட்டி என்னை வற்புறுத்திய போதெல்லாம் பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். இப்பொழுது என் பாட்டிக்கு சொல்ல நல்ல பதில் கிடைத்துவிட்டது. என் பாட்டி இட்லிக்கு போடும் போதெல்லாம் நான்தான் ஆட்டு உரலில் மாவு ஆட்டிக்கொடுப்பேன். என் பாட்டி மாவை தள்ளி விடுவார்கள். ஒரு நாள் அப்படி ஆட்டிக்கொண்டிருக்கும்போது

"டேய் விச... கர்ததர நம்புடா."

"வேண்டாம் வேண்டாம். நான் இந்துச்சாமியையே கும்பிட்டுக்கறேன்.."

"இந்துச்சாமிதான  உங்க அம்மாவ நம்மகிட்டருந்து பறிச்சிருச்சி. கர்த்தர்தாண்டா  உண்மையான கடவுள்.

"ம்ம்ம் அப்படின்னு யார் சொன்னா?"

"பால்க்காரம்மாதான் சொல்லுச்சி"

"அப்படின்னா பால்க்காரம்மாவோட மகன ஆத்து வெள்ளம் அடிச்சுட்டு போகும்போது அவர ஏன் கர்த்தர் காப்பாத்தல?

"அவர கர்த்தர் அழைச்சுக்கிட்டாரு."

"கர்த்தர் அழைச்சுகிட்டா அது சரி. நம்ம சாமி அழைச்சுக்கிட்டா அது தப்பா?"

அன்றிலிருந்து என் பாட்டி என்னை மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. என்ன காரணமோ தெரியவில்லை. கொஞ்ச நாளில் என் பாட்டி மறுபடியும் இந்துவாக மாறிவிட்டார்கள்.

அந்த பால்க்காரம்மாவின் டார்கெட்டில் (ஏ)மாற்றப்பட்டது என் அத்தையும் ஒருவர். என் அத்தையின் ஒரு பிரச்சினைக்கு காரணம் இந்துச்சாமிதான் என்று நம்பவைத்து அவர்களையும் கிறிஸ்தவராக மாற்றி விட்டார்கள். என்ன காரணத்துக்காக என் அத்தை மதம் மாறினார்களோ அது இருபது வருடங்கள் ஆகியும் இன்றுவரை நிறைவேறவே இல்லை. உண்மையை சொல்லப்போனால் முன்பிருந்ததை விட இப்பொழுது நிலைமை மோசமாகத்தான் உள்ளது. என் பாட்டி போலல்லாமல் என் அத்தை இன்னும் கிறிஸ்தவராகவே இருக்கிறார். அவர்கள் மதம் மாறியதால் நல்லது நடந்ததோ இல்லையோ குடும்பத்தினுள் நிறைய மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் தொடர்ந்துகொண்டிருக்கிறன. எல்லோரிடமும் பாசத்துடன் பழகிக்கொண்டிருந்த என் அத்தை இப்பொழுது எல்லோருக்கும் அந்நியமாகத் தெரிகிறார். அவர்களால் எங்களுடன் ஒட்டமுடியவில்லை. எங்களாலும் அவர்களுடன் ஒட்டமுடியவில்லை. 

மதம் மாற்றும் அன்பர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். மாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டீர்கள் என்றால் ஒரு குடும்பம் முழுவதையும் மாற்றிவிடுங்கள். கர்த்தர் உங்களை இரட்சிப்பாராக!

Wednesday, January 19, 2011

நீங்களே கர்த்தர் சொன்னபடி நடந்துக்கல. அப்புறம் எப்படி நாங்க???

இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பதிவு அல்ல.

சில வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சுவையான சம்பவம். நானும் என்னுடைய சித்தப்பாவும் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக வந்த ஒருவர் எங்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு கர்த்தரை நம்பினால் ஏற்படும் நன்மைகளை(?) விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு பேருக்குமே அவர் பேச்சை கேட்பதில் துளியும் ஆர்வம் இல்லை. அது எங்கள் நடவடிக்கை மூலமாக அவருக்கு மறைமுகமாக உணர்த்தியும் அவர் விடாது தொடர்ந்துகொண்டே இருந்தார். பொறுமை இழந்த என் சித்தப்பா "என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு விளக்கம் சொல்லுங்கள். நான் இப்பொழுதே உங்கள் மதத்தில் சேர்ந்து விடுகிறேன்" என்றார். "சரி கேளுங்கள்" என்றார் அவர். அவர்களுக்குள் நடந்த உரையாடல்:

"கிறிஸ்தவரான நீங்கள் கர்த்தர் விருப்பப்படி தான் நடந்துகொள்கிறீர்களா?

"ஆமாம்"

"உடலில் ஆடைகளே இல்லாமல் இருந்த ஆதாம் ஏவாள் ஆடைகள் அணிய ஆரம்பித்தது ஏன்?"

"கர்த்தர் உண்ணக்கூடாது என்று சொன்ன ஆப்பிளை சைத்தான் பேச்சைக் கேட்டு சாப்பிட்டதனால் கெட்ட எண்ணங்கள் (ஆடைகள் அணிவது உட்பட) வந்துவிட்டது. அதனால் அவர்கள் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர்."

"அப்படியானால் கர்த்தரின் விருப்பம் நாமெல்லாம் ஆடைகள் அணியக்கூடாது என்றுதானே அர்த்தம். அது தெரிந்தும் நீங்கள் ஏன் அவர் விருப்பத்திற்கு மாறாக ஆடைகள் அணிந்திருக்கிறீர்கள்?"

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த நபர் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிட்டார். நாங்களும் நிம்மதி அடைந்தோம். இதைப்படிக்கும் உங்களில் யாருக்காவது இதுமாதிரி ஒரு நிலைமை வந்தால் இந்த கேள்வியை கேட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்.

இன்று ஒரு புகைப்படம்: சுந்தரா டிராவல்ஸ்

காருக்குள்ள இருந்து இவ்ளோ புகை வருதே, ஒருவேளை உள்ளே கரி அடுப்பு வைத்து சமைத்துக்கொண்டிருப்பார்களோ?

இந்த காரையெல்லாம் கண்டுக்காத டிராபிக் போலிஸ் புகையே வராத என்னோட பைக்குக்கு எமிசன் சர்டிபிகேட் இல்லைன்னு அபராதம் போடுது... என்ன கொடும சரவணன் இது....

Tuesday, January 18, 2011

இன்று ஒரு புகைப்படம்: விபரீதப் பயணம்

ஏம்பா! நீங்க வாங்கின காய்கறிகள உங்க ஊருல போய் விக்க வேணாமா?

இடம்: பூந்தமல்லி ஹை ரோடு (அரை கிலோமீட்டருக்கு ஒரு டிராபிக் போலிஸ் வீதம் நிற்கும் ரோடு)

Wednesday, January 12, 2011

சாலையில் சாகசமும் வீணாகும் உயிர்களும்...

காலை ஒன்பது மணி. இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனம் என்னை வேகமாக முந்தி சென்றது. அதில் சுமார் இருபது வயது மதிக்கத் தக்க இருவர் சென்றனர். சாலை நேராக இருந்தபோதிலும் அந்த பைக்கை ஒட்டியவன் வளைத்து வளைத்து பந்தாவாக(?) ஒட்டி சென்றான். முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு மாநகரப் பேருந்தை இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றான்.  சாலையின் ஓரத்தில் பேருந்துக்கு சற்று முன்னால் ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருக்கிறது. பேருந்து அந்த ஆட்டோவை நெருங்கும் முன் இவன் பேருந்தை முந்த வேண்டுமென்பது இவனது திட்டம். ஆனால் இவன் திட்டம் பலிக்கவில்லை. ஆட்டோ மீது இவனது பைக் லேசாக உரசியதைப் பார்த்தேன். அதற்குப்பின் அந்த பைக்கைக் காணவில்லை. அடுத்த வினாடி டம டம என்று சப்தம். பேருந்து கிரீச்சிட்டு சடன் பிரேக் போட்டு நின்று விட்டது. கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால் பேருந்தின் முன் சக்கரத்துக்கு அடியில் பைக் நசுங்கிக் கிடந்தது. அந்த இருவரையும் காணவில்லை. இதற்குள் கூட்டம் கூடி விட்டது. அனைவரும் பதைபதைக்கும் நெஞ்சத்தோடு பேருந்துக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு பேரும் காலி என்று நினைத்தேன். ஆனால் முகம் கை கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட உருண்டு எழுந்து நடந்து வந்தனர் இருவரும். யார் செய்த புண்ணியமோ உயிர் பிழைத்து விட்டனர். ஒருவேளை உயிர் போயிருந்தால்? பின்னால் அமர்ந்து வந்த பையனும் நண்பனுடன் போய் சேர்ந்திருப்பார் (நண்பேன்டா !!!).

இருவரும் பேருந்தின் அடியிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் இருவரின் முகத்திலும் மரண பயம் தெரிந்தது. பேயறைந்தாற்போல் வெளிறிப்போய் இருந்தது அவர்கள் முகம். உய்யலாலா பாடிக்கொண்டு சந்தோஷமாக இருந்த அவர்களின் நிலை நொடியில் மாறிப்போனது.

பேருந்தின் வலதுபுறம் முந்திச்செல்ல வழி இருந்தும் இவன் இடதுபுறம் சென்றது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இடதுபுறம் சென்றால் தான் பேருந்தில் உள்ள பெண்களைக் கவர முடியும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இப்படி பந்தாவாக பைக் ஓட்டிச்செல்வதை உண்மையிலேயே இளம் பெண்கள் ரசிக்கிறார்களா அல்லது "லூசுப்பய" என்று நினைக்கிறார்களா என்பது தான். எப்படி நினைத்தாலும் நஷ்டம் என்னவோ பைக் ஒட்டுபவருக்குத்தான். 

எத்தனை உயிர்ப்பலி நடந்தாலும் இது போன்ற நபர்கள் சட்டை செய்யப்போவதில்லை. தனக்கென வரும்போதுதான் தெரியும். அப்போது உயிர் இருந்தால் திருந்த வாய்ப்பு உள்ளது.

Tuesday, January 4, 2011

கிரெடிட் கார்ட் எனும் புதைகுழி

சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு என்னிடம் கிரெடிட் கார்ட் கிடையாது. அவசர தேவைக்காக உதவும் என்று எண்ணி கிரெடிட் கார்ட் வேண்டி விண்ணப்பித்தேன். கஜினி முகம்மதுவை விட அதிக தடவை பல வங்கிகளில் விண்ணப்பித்ததும் எந்த வங்கியும் எனக்கு கருணை(?) காட்டவில்லை. என் நண்பர்களில் ஒரு சிலர் பர்ஸ் நிறைய கிரெடிட் கார்டுகளை அடுக்கி வைத்துக்கொண்டு பந்தா காட்டுவார்கள். நமக்கு மட்டும் ஏன் இந்த வங்கிகள் தருவதில்லை என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் எதிர்பாராத விதமாக ஒரு கிரெடிட் கார்ட் வந்து சேர்ந்தது. ஆஹா! கடவுள் கண் திறந்து விட்டார் என்று சந்தோஷம் அடைந்தேன் (அதுதான் புதைகுழியின் முதல் அடி என்பது அப்போது புரியவில்லை). கிரெடிட் கார்ட் வந்துவிட்டது ஆனால் அதை சும்மா வைத்திருந்தால் நமக்கு அவமானம் அல்லவா.. எனவே EMI இல் பொருட்கள் வாங்கி குவிக்க ஆரம்பித்தேன். நினைத்த பொழுதெல்லாம் ஷாப்பிங். என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எல்லாம் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கி வந்தேன். அதிகம் செலவழித்தது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குத்தான்.

ஒரு கார்ட் வாங்கியவுடன் மற்ற வங்கிக்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கு வேர்த்து விடுகிறதோ தெரியவில்லை. கிரெடிட் கார்ட் வாங்கச்சொல்லி தினமும் ஒரு அழைப்பாவது வந்துவிடும் (ஏன்யா உங்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணம்?). சரி... காசா பணமா? ஒசியாத்தானே குடுக்குறாங்க. ஒண்ணுக்கு நாலா வாங்கிப்போடுவோம்னு நாலைந்து கார்டுகளை வாங்கிப்போட்டேன். பர்ஸுல வைக்க இடம் இல்லாமல் போகவே இனிமேல் போதும் என்று முடிவெடுத்திருந்தேன். அந்த நேரம் எனக்கு ஒரு கால் வந்தது. வழக்கம் போலவே அது ஒரு பெண்.

பெண்: "நாங்க ____ வங்கியில இருந்து பேசுறோம் சார்"
நான்: "சொல்லுங்க மேடம்"
பெண்: "உங்களுக்கு லைப் டைம் ப்ரீ கிரெடிட் கார்ட் சாங்க்ஷன் ஆகியிருக்கு சார்"
நான்: நான் அப்ளை பண்ணவே இல்லையே
பெண்: "உங்களுக்கு ப்ரி-அப்ப்ரூவ் ஆகி இருக்கு சார். நீங்க ஓகே சொன்னா டாகுமென்ட் கலெக்ட் பண்ண ஆள் அனுப்புறோம் சார்.
நான்: இல்ல எனக்கு கிரெடிட் கார்ட் வேண்டாம்.
பெண்: "ஏன்  சார்?
நான்: ஏற்கனவே என்கிட்டே நிறைய கிரெடிட் கார்ட் இருக்கு.
பெண்: "எந்தெந்த வங்கி கார்ட்லாம் வச்சிருக்கிங்க சார்?
நான்: ICICI, SBI, HDFC, Duetch bank.....
பெண்: "எல்லா வங்கியிலும் வாங்குறிங்க. எங்க வங்கி கார்ட் மட்டும் ஏன் சார் வாங்க மாட்டேங்கிறிங்க?
நான்: ஆள விடுமா தாயினு சொல்லிட்டு  இப்படி கூடவா பிட்ட போடுவாங்க என்று நினைத்துக்கொண்டே  கட் பண்ணி விட்டேன். இவங்களுக்கெல்லாம் இப்படி பேசுறதுக்கு ட்ரைனிங் குடுக்குறாங்களா இல்ல தானா வருதா??

ஓரிரு வருடங்கள் சுமுகமாக சென்றது. அப்போது மாதா மாதம் பில் தொகையை செலுத்த முடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல கிரெடிட் கார்ட் பில் மட்டுமே செலுத்த முடிந்தது. மற்ற செலவுகளுக்கு கையில் காசு இருப்பதில்லை. கர்ண பரம்பரை நண்பர்கள் (விஜயானந்த், சுதாகர், வினோத்குமார்) சிலர் இருப்பதால் அவர்களிடம் ஐந்நூறு ஆயிரம் என்று வாங்கி மிச்ச மாதத்தை ஒட்டி விடுவேன். அடுத்த மாதம் ஆரம்பித்ததும் கிரெடிட் கார்ட் பில்லும் கட்ட வேண்டும். நண்பனின் பணத்தையும் திருப்பி தரவேண்டும். நண்பனை பகைத்துக்கொள்ள விருப்பமில்லை (அப்போதான் அடுத்த மாதம் பணம் தருவான்). நண்பனுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்துவிட்டு மீதம் உள்ளதை மட்டும் கிரெடிட் கார்டுக்கு கட்டி விடுவேன்.

இப்போதுதான் புதை குழிக்குள் நான் சிக்கி இருப்பதை உணர ஆரம்பித்தேன். இதிலிருந்து வெளியே வர சில முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இப்படியே தொடர்ந்த என் கதை கடந்த வருடம் மிகவும் கவலைக்கிடமானது.  மினிமம் அமவுண்ட் மட்டுமே கட்ட முடிந்தது. இனியும் தாமதிப்பது நல்லதல்ல. ஏதாவது செய்தாக வேண்டும். பெரிதாக ஒரு யோசனையும் தோன்றவில்லை. ஒரு பர்சனல் லோன் போட்டு எல்லாத்தையும் செட்டில் பண்ணி விட்டேன். இனிமேல் கிரெடிட் கார்டை தொடவே கூடாது என்று முடிவு பண்ணி விட்டேன். ஆனாலும் உடைத்துப்போட மனம் வரவில்லை. அவசரத்தேவைக்கு உதவுமே.....

பிரபல (?) பதிவுகள்