Thursday, January 10, 2013

வெற்றியும் நானும் - தொடங்கியதும் முடிந்து போன நட்பு (உண்மை சம்பவம்)

எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் வெற்றிவேல் என்பவருக்கும் எனக்கும் இருந்த நட்பை பற்றிய பதிவு இது. விழிப்புணர்வு பதிவும் கூட.

புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நான் அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. ஆனால்  வெற்றியோ எல்லோரிடமும் சுலபமாக பழகுபவர். ஒருமுறை நான் புதிதாக வாங்கியிருந்த டிஜிட்டல் கேமராவை நண்பர்களிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது  கேமராவை கையில் வாங்கிய வெற்றி அதிலுள்ள எல்லா பட்டன்களையும் அமுக்கி அமுக்கி பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு சரியான கோபம் இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருந்துவிட்டேன். இதுபோல ஒருசில சம்பவங்களால் நான் அவரிடம் பழகுவதை தவிர்த்து வந்தேன்.

ஆனால் அலுவல் நிமித்தமாக அவருக்கும் எனக்கும் அடிக்கடி தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. சிறிது நாளில் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் போய் நட்பு வளர ஆரம்பித்தது. நன்றாக பேசவும் அரட்டை அடிக்கவும் ஆரம்பித்தோம். நட்பு வளர்ந்து பேஸ்புக் மூலம் தொடர்ந்தது. ஒருநாள் நான் வீட்டுக்கு சென்றதும் பேஸ்புக் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வெற்றி சாட்டில் "வீட்டுக்கு போனதும் பேஸ்புக் ஆ?" என்று கேட்டார் நான் பதிலுக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலியை மட்டும் போட்டு விட்டேன்.



இதுதான் நான் அவரிடம் பண்ணும் கடைசி சாட் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் (11/11/11) காலை 6:45 மணிக்கு நடந்த சாலை விபத்தில் வெற்றி பலியாகி விட்டார் என்று தகவல் வந்தது. குறைந்த நாட்களே பழகி இருந்தாலும் என் மனம் அடைந்த துயரம் மிக அதிகம். வீட்டிலிருந்து விபத்து நடந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன். கை கால்களில் நடுக்கம். எவ்வளவு முயன்றாலும் வண்டி 30 கிமீ வேகத்தை தாண்டவில்லை. நான் சென்று சேர்ந்த பொழுது உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று விட்டார்கள்.

வெற்றி அவர் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததால் இருவரும் அதிகாலை 6 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். இவர்கள் வாகனத்தை முந்திச்செல்ல அசுர வேகத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்திருக்கிறது.  சில நாட்களுக்கு பெய்த மழையில் சாலை ஓரம் குண்டும் குழியுமாக இருந்ததினால் இவரால் உடனடியாக வழி விட முடியவில்லை. பொறுமை இல்லாத பேருந்து டிரைவர் இடித்ததில் இருவரும் கீழே விழுந்து விட்டனர். வெற்றியின் மனைவி இடது பக்கம் விழுந்ததால் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பேருந்து வெற்றியின் தலையை நசுக்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து இறப்பது எவ்வளவு கொடியது?

விபத்து நடந்தது எங்கள் அலுவலகத்துக்கு மிகவும் அருகில் என்பதால் அப்போது பணியில் இருந்த அனைவரும் (சுமார் 100 பேர்) விபத்து நடந்த இடத்தில் கூடி இருந்தார்கள். அனைவர் முகத்திலும் சோகம். பெரும்பாலானவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட அரசுப் பேருந்து டிரைவரை கைது செய்ய வென்றும் என்று கோரி சாலை மறியல் செய்ய வேண்டும்  என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கள் அலுவலக மேலாளர் ஒருவர் வந்து அனைவரும் அலுவலகத்துக்கு திரும்பி வந்து வேலை செய்யுமாறு சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு மேலாளர்  அங்கிருந்த போலீசிடம் "இங்கே இவர்கள் (சக ஊழியர்கள்) நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் கம்பெனிக்கு நஷ்டம். அதனால் இவர்களை துரத்தி விடுங்கள்" என்று சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.

வெற்றி செய்த தவறுகள்: 

1. தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டியது.
2. லைசன்ஸ் வாங்காமல் வண்டி ஓட்டியது.
 தலைக்கவசம் அணியாததால் உயிரை இழக்க நேரிட்டது.
லைசன்ஸ் இல்லாததால் மனைவிக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

சக ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை வெற்றியின் மனைவிக்கு கொடுத்து உதவுவதாக முடிவெடுத்தோம்.  அந்தத் தொகையுடன் எங்கள் நிறுவனம் சார்பிலும் ஒரு தொகை சேர்த்து அவர் மகள் பெயரில் டெபாசிட் செய்தார்கள். ஆம் அவருக்கு மூன்று  வயதில் ஒரு மகள்  இருக்கிறாள். மேலும் சில ஊழியர்கள் சென்னை மேயரை சந்தித்து நிலைமையை சொல்லி அரசு நிவாரணத் தொகை வாங்கிக் கொடுத்தார்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு உயிருக்கு ஈடாகாது.

அப்பா எப்போ எழுந்திருப்பாரு என்று கேட்டுக்கொண்டு அங்கே சுற்றிக்கொண்டிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தையின்  முகம் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.


4 comments:

  1. இறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் எந்நேரத்திலும் வரலாம் என்பது உங்கள் நண்பரின் இழப்பில் மூலம் அறியலாம்.

    அழகிய விழிப்புணர்வூட்டும் செய்தியுடன் நடந்த நிகழ்வை கூறியிருப்பது தனிச்சிறப்பு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. மிகவும் துயரமான நிகழ்ச்சி.நண்பரது ஆத்மா சாந்தியடையவும் இப்பேரிழப்பை தாங்கும் மன உறுதியை குடும்பத்தாருக்கு அருளவும் ஆண்டவனை வேண்டுவோம்.

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்